அதிமுக சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று கோடங்கிபட்டி, தோரணங்கல்பட்டி, சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது. திமுகவினர் பொய்களைச் சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து வருகிறது.
தோரணங்கல்பட்டி மக்கள்தான் கடந்த முறை என்னை வெற்றிபெறச் செய்தீர்கள். இந்த வாக்குச் சாவடியில் அதிக வாக்குகள் பெற்று அதன் அடிப்படையிலேயே எனது வெற்றி உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்தப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் மீண்டும் ஆட்சி அமைந்ததும் அமைத்து தரப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் இவ்விடத்தில் நகராட்சி குப்பை கொட்டும் இடமாக மாற்றப்படும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசிவருகிறார். எனவே நீங்கள் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.
முன்னதாக கோடங்கிபட்டி முத்தாலம்மன் ஆலயத்தில் மூன்றாவது முறையாக வழிபாடு நடத்திவிட்டு தோரணங்கல்பட்டி கிராமத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் 3.5 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்!