கரூர்: தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ரத்தாகிவிடும் என்ற பொய்யான தகவல் பரவிவருகிறது. இந்த வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூர் அரசு கலைக் கல்லூரியில் நாளை நடக்க உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாம் (Job Fair in Karur) நிகழ்ச்சிக்கான ஏற்பாடு குறித்து தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (ஜன.21) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கரூர் மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் நலத்துறையானது, கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நடத்துகிறது. இந்த முகாமில் 220 தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான வேலைவாய்ப்பு தேடுவோரை தேர்வு செய்ய உள்ளனர்.
கரூரில் மிக பிரம்மாண்டமாக ஒரே நேரத்தில் 26 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்புகள் வழங்கக்கூடிய வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்க உள்ளார் என்றார்.
தமிழ்நாட்டில் வழங்கப்படும் இலவச மின் திட்டங்கள் ரத்து ஆகக்கூடும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவது, குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இரண்டு கோடியே 74 லட்சம் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைக்கும் பணியில் இரண்டு கோடிக்கு மேல் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து இலவச மின் திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்படும்.
கடந்தாண்டு மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.948 கோடி அரசு மானியமாக வழங்கியது. நடப்பு ஆண்டில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. நலிவடைந்த நிலையில் இருந்த மின்சார வாரியத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து தேவையான நிதிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மின்சார வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து இலவச மின் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். எனவே, பொதுமக்களுக்கு அச்சமும் பயமும் தேவையில்லை' எனத் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கரூர் அரசு கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, மாவட்ட தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் இளைய மகன் போட்டியா.? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்..