கரூர்: வரவேற்பு பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முகநூல் வாயிலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கூறியிருப்பதாவது, 'கரோனா என்னும் பெருந்தொற்று நமது மாநிலத்தை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான நமது அரசு, இந்த கடுமையான சூழ்நிலையை வெல்ல பல திட்டங்கள் வகுத்து முழுமூச்சுடன் களப்பணியாற்றி வருகின்றது.
இந்த அசாதாரணமான சூழ்நிலையில் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கூட்டணி கட்சி தோழர்கள் அனைவரும், நமது தலைவரின் அறிவுறுத்தலின் படி, வரவேற்பு வளைவுகள், பதாகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மிக முக்கியமாக, இப்பொழுது வரவேற்பு பதாகைகள் ( ப்ளெக்ஸ் பேனர் ) வைத்திருப்பவர்கள், இன்றே உடனடியாக அவற்றை அகற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னைச் சந்திக்க வருவோரும், தயவு கூர்ந்து பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்த்து தலைவர் கூறியது போல புத்தகங்களை பரிசளிப்பதே மனதிற்கு மகிழ்வானது.
கரூர் மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்றியமைப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். கழகத்தினர் அனைவரும் தங்கள் பாதுகாப்பையும், குடும்பத்தினரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும், இந்த பெருந்தொற்றை முறியடிக்கும் களப்பணியில் கவனமாக செயலாற்ற கேட்டுக் கொள்கிறேன்.
கரூர் மாவட்ட மக்கள் அனைவரும் அரசின் அறிவுறுத்தல்களை கவனமுடன் பின்பற்ற வேண்டுமென உங்கள் சகோதரனாய் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். திமுக தலைவர் கூறியது போல, நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம், நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை': கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்