கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு தற்போது பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். கரூர் காந்திகிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளிக்கல்வித்துறை கலை விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கினார். அதைத்தொடர்ந்து கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய வணிகவளாக கட்டடப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, ஆணையாளர் ரவிச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் ராஜா, கனகராஜ், அன்பரசன் கரூர் மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் ராஜு உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘கரூர் மாநகராட்சி சார்பில் ரூபாய் 6 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் வணிக வளாகப் பணிகள் திட்ட மதிப்பீடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 5 மாத காலத்திற்குள் முதல் தளம் பணிகள் நிறைவுற்று, ஜூன் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
இதில் 174 காய்கறி கடைகள் அமைப்பதற்கு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரூர் நகர் பகுதியில் 20 ஆண்டுகால காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பணிகள் விரைவாக தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு தனி வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தடுத்து பணிகள் மெதுவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, அரசு அதிகாரிகள் உடன் உள்ளனர். வேறொரு இடத்தில் இதற்கான தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து பதில் அளிக்கிறேன் எனத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் அதிமுக என்னும் கட்சி புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
எப்படியாவது செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கரூரில் கண்ட்ரோல் இல்லை என 'மெயின் ரோடு' என எல்லோராலும் புகழப்படும் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கண்காணிக்கப்பட்டு அமைதி பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது. 'தனக்குத்தானே கண்ட்ரோல் இல்லாதவர்கள் கூறும் கருத்துக்களை மக்கள் நம்ப போவதில்லை' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டை தமிழகம் என்ற ஆளுநர் ரவி - கண்டனம் தெரிவித்த வைகோ