கரூர்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 46 இடங்களை தன்வசப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும்; மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று(பிப்.27) கரூர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது அவர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைவரின் நல்லாட்சிக்கு மகுடம் சூட்டும் வகையில் வாக்காளர்கள் மிகப்பெரிய வெற்றியை வழங்கியுள்ளார்கள்.
திமுக ஒரு ஜனநாயக இயக்கம்
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அதிமுகவை நிராகரித்து எதிர்க்கட்சிகளின் பொய்யான பரப்புரைகளுக்கிடையே திமுகவின் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளனர். எனவே, புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொரு வாக்காளரிடமும் 5 நிமிடம் செலவிட்டு நன்றி அறிவிப்பு செய்திடவேண்டும்.
அடுத்த மூன்று நாட்களுக்குள், தங்கள் பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கைகளைப் பெற்று அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் தேவையான அளவு நிதி பெற்று கோரிக்கையை நிறைவேற்றி தருவதில் கவனம் செலுத்த வேண்டும்.
மாநகராட்சி மேயர், பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனுவாக அளித்தால் தகுதியானவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படும். திமுக கட்சி ஒரு ஜனநாயக இயக்கம். உங்களின் கட்சிப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன" என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளங்கோ கிருஷ்ணராயபுரம், சிவகாமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் புதிய மாநகராட்சி மேயர், துணை மேயர், பேரூராட்சித் தலைவர் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்று வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலை!