கரூர் மாவட்டத்திலுள்ள 771 அறநிலையத்துறை திருக்கோயில்களில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று (டிச.12) ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 771 திருக்கோயில்கள் உள்ளன. இதில் தேவைப்படும் திருக்கோயில்களில் பொது மராமத்துப் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், மடப்பள்ளி கட்டுதல், குடமுழுக்கு மேற்கொள்வது, பழமை வாய்ந்த திருக்கோயில்களில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்வது உள்ளிட்டப் பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோயில்களில் திருப்பணி
குறிப்பாக திருக்காம்புலியூரில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில், வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குளித்தலை நீலமேகப்பெருமாள் திருக்கோயில், இனுங்கூர் எல்லை அம்மன் திருக்கோயில், அரவக்குறிச்சி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கள்ளை காளியம்மன் திருக்கோயில்,
பாதிரிப்பட்டி மாரியம்மன் திருக்கோயில், தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி திருக்கோயில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட கோயில்களில் திருப்பணி நடத்துதல், மராமத்துப் பணிகள் நடத்துதல், பூச்சு வேலை கட்டடங்கள் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் சம்பந்தமாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான திருக்கோயில் நிலங்கள் மீட்டெடுப்பது, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கம்பி வட ஊர்தி மேம்படுத்துதல், பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கழிவறைகள் அமைப்பது, கட்டணச் சீட்டு விற்பனை அறை அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாகவும்,
பிற திருக்கோயில்களில் மடப்பள்ளி பழுதுபார்த்தல், புதுப்பித்தல், மண்டபம் கட்டுதல், கொடிமரம் பழுதுபார்த்தல், நிழல் மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் பழுதுபார்த்தல் உள்ளிட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்
மேலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிவுறுத்தலின்பேரில் கரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் 216 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வுபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தினை ரூபாய் மூவாயிரத்தில் இருந்து ரூபாய் 4000 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி 32 கிராம கோயில் பூசாரிகளுக்கு நவம்பர் 2021 முதல் ரூபாய் 4000 கிராம கோயில் பூசாரிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மற்றும் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆகிய இரண்டு திருக்கோயில்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் இன்று முதல் வசூலிக்கப்பட உள்ளது.
அந்த வகையில் சைக்கிள் நிறுத்துவதற்கு இலவசமாகவும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ஐந்து ரூபாயும், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பத்து ரூபாயும் வசூல் செய்யப்பட வேண்டும் என்றும், இதன் தொடர்பாக மேற்படி இரண்டு திருக்கோயில்களிலும் கட்டண விவரங்கள் பக்தர்களின் பார்வைக்கு விளம்பரப் பலகை வைக்கக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, கரூர் மாவட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம்!