கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று(ஏப்ரல் 2) தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். இதுகுறித்து கூறுகையில், 'கடந்த மார்ச் 31ஆம் தேதி கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி என்ற செய்தியை செய்தியாளர்களிடம் பேட்டியாக அளித்துள்ளார்.
அப்பொழுது ஒரு பொய்யான ஆவணத்தை செய்தியாளர்களிடம் வழங்கி, மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கிவிட்டது எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆவணத்தில் ஆணை வெளியிடப்பட்ட தேதியும் எண்ணும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல இந்த ஆணையை வழங்கிய அதிகாரியின் கையொப்பம் அதில் இல்லை.
மேலும், கரூர் மாவட்டத்தில் காவிரி - அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது குறித்து அதிகாரிகளுக்குப் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. 100 புகார்கள் அளிக்கப்பட்டால் ஒரு மனு மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கரூர் - காந்திகிராம அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைக்க வரும்பொழுது 1500 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுகிறது எனப் புகார் அளித்தோம். உரிய ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல நேற்றுகூட அமராவதி ஆற்றங்கரையில் விஸ்வநாதபுரி எனுமிடத்தில் அதிமுகவினர் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாகப் புகார் அளித்தோம். மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளுவது குறித்து பேசிய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரே இப்படி போலியான ஆவணத்தைக் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளார் என்பதால், அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதால், அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செய்முறைத் தேர்வு முடிந்ததும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை