தமிழ்நாட்டில் வரும் 27, 30ஆம் தேதிகளில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதனடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பல்வேறு கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சிக்குள்பட்ட காமராஜ் நகர், தரணி நகர், தங்க நகர், வெண்ணை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பரப்புரை மேற்கொண்டார்.
அதிமுக சார்பில் ஊராட்சி செயலர் பதவிக்கு ஆனந்த பாலு, ஊராட்சிக் குழு உறுப்பின பதவிக்கு அலமேலு மனோகரன், இரண்டாவது வார்டு பதவிக்கு கிருபவதி முருகையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். அதேபோல், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு பூட்டு சாவி சின்னத்தில் வாக்களிக்குமாறு திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பரப்புரையின்போது பொதுமக்களிடம் அமைச்சர் பேசுகையில், இப்பகுதி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரச்னை இருந்துவருகிறது எனக் குறிப்பிட்டார். அதனை தான் தீர்த்துவைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அரசு இதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு - வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு!