கரூர்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,554 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 86 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் முதியோர் உதவித் தொகை வழங்கினார்.
தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை சார்பில் 804 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 44 பயனாளிகளுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், " தமிழ்நாட்டில் கரோனா 2ஆம் அலையின் போது தொற்று பாதிப்பு அதிகரித்தது. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு தினம்தோறும் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள் 20 லட்சம் பேர் உள்ளனர்.
நானும் கூட 25 ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கு மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வருகிறேன். இனி ஒரு உயிரிழப்பு கூட மருந்து மாத்திரைகள் இல்லாததால் ஏற்படக் கூடாது. இதற்காக முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் 37 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்று 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. வரும் 2021 டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தயார் நிலையில் பள்ளிகள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்