ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று இன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, மதுரை நெடுஞ்சாலையில் கரூர், ஆட்டம்பரப்பு எனும் இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரியில் தீப்பற்றியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த புதிய ஓகி நோவா இருசக்கர மோட்டார் வாகனங்கள் எரிந்து நாசமாகின. இருசக்கர வாகனங்களில் பொருத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பேட்டரிகளில் இருந்து புகை கிளம்பிய பின்னர் கண்டெய்னர் முழுவதும் பற்றி எரிந்ததால் இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.
சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிர்சேதம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.