அதிமுக முன்னாள் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சருமானவர் பாப்பா சுந்தரம் (86). இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று (ஏப். 18) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கரோனா தொற்றால் கடந்த 15 நாள்களாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரகக் கோளாறு என வயோதிகம் காரணமாக உடல் உபாதைகள் இருந்தாகக் கூறப்படுகிறது. இதனிடையே உயிரிழந்த பாப்பா சுந்தரத்தின் உடல் அவரது சொந்த ஊரான குளித்தலை வளையப்பட்டி பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவருக்கு, பாலாமணி என்ற மனைவியும், கருணாகரன், கல்யாணகுமார் என்ற இரு மகன்களும் கலாவதி என்ற மகளும் உள்ளனர். இதில் கருணாகரன் குளித்தலை அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
இன்று (ஏப்.19) காலை 10 மணியளவில் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி அவரது வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 1989, 1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாப்பா சுந்தரம். 2002ஆம் ஆண்டுமுதல் 2003ஆம் ஆண்டுவரை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
2011ஆம் ஆண்டு நான்காவது முறையாக குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதிமுகவில் 1972ஆம் ஆண்டுமுதல் உறுப்பினராக இணைத்துக்கொண்ட பாப்பா சுந்தரம், 2000ஆம் ஆண்டுமுதல் 2003ஆம் ஆண்டுவரை கரூர் மாவட்டச் செயலாளராகவும் மாவட்ட அவைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
இதையும் படிங்க: ‘ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவு உள்ளது - புதுச்சேரி துணை நிலை ஆளுன
ர்