கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு போன்ற கழிவுகள் கலப்பதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அந்த விசாரணையின் போது, "அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக சாயக்கழிவு உள்ளிட்ட கழிவுகளை கலக்கப்படுவதால் ஆறு மாசடைகிறது. இதனால் நோய் உருவாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். ஆற்றில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? டன் கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? என" நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமை செயலர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குனர் மதிவாணன் தலைமையில், பொதுப்பணித்துறை மற்றும் அம்மாவட்ட நகராட்சி அலுவலர்கள் இன்று அமராவதி ஆற்றுப்பகுதியினை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கால்வாய்களில் வரும் நீரை ஆய்வுக்காக சேகரித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சாயக்கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்றிய ஆலைகளின் மின்சாரம் துண்டிப்பு!