கரூர்: காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி மகள் அருந்ததி (22). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், வேறு சமூக இளைஞரான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடவூர் குண்டுகுழிப்பட்டி வினோத்குமார் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.
வினோத் குமார் மேட்டுப்பாளையம் அன்னூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அருந்ததிக்கும் வினோத் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். அருந்ததியின் பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் அன்னூரில் உள்ள முருகன் கோயிலில் பொதுமக்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி மூன்று மாதங்கள் கழித்து அருந்ததி கருவுற்ற நிலையில் வினோத்குமாரின் பெற்றோர் சாதிப் பெயரைச் சொல்லி வினோத்குமாரை பிரித்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் அன்னூர் காவல் நிலையத்திலும் கரூர் சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் அருந்ததி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே வினோத்குமாருக்கு அவர் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் அவரின் பெற்றோர் திருமணம் முடித்துள்ளதாகத் தெரிகிறது. வினோத்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதைத் தடுக்க முற்பட்டபோது கரூர் சிந்தாமணிபட்டி காவல் துறையினர், உள்ளூரில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் தூண்டுதலின் பேரில் அதனைத் தடுக்காமல் அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு அலைக்கழித்தாகத் தெரிகிறது.
இதனால் நேற்று (டிச.31) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தனது தாயுடன் வந்த அருந்ததி வினோத்குமார் உடன் சேர்த்து வைக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேற மாட்டேன் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்குமாறு வலியுறுத்தினர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸின் மனித உரிமை மாநிலச் செயலாளர் செல்வராணி, “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததற்காக பாகுபாடு காட்டி வினோத்குமாரின் பெற்றோர் ஆளும் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதனால் வேறுவழியின்றி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்துள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை வேண்டும்” எனத் தெரிவித்தார்.