கரூர் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகில் அன்னை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயிலின் 97ஆம் ஆண்டு திருவிழா கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அமராவதி ஆற்றில் புனித நீராடி ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஜவஹர் பஜார் வழியாக ஊர்வலமாக மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள கோயில் வரை வந்தனர். கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது. இன்று பக்தர்கள் கரகத்தை ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவுபெற உள்ளது. திருவிழாவினை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதுடன், பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: சிகரெட் புகைக்கும் சிவன்... இமயமலையில் ஆன்மிக அதிசயம்..!