கரூர் அருகே புகலூர் பகுதியில் ஜனவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களில் மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் சிறந்த வீரர்களை மாநில அளவிலான கபடிப் போட்டிக்குத் தேர்வு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் இருந்து தலைசிறந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த போட்டியைச் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடிய 12 வீரர்கள் தமிழ்நாடு அணிகளுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர். மூன்றாவது நாளான நேற்று தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இறுதிக் கபடிப் போட்டியின் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.
கோவையில் விரைவில் தேசிய அளவிலான சைக்கிள் பந்தயம்
அதன் பின்பு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், 'கிராமப்புறத்தில் இருந்து வந்த வீரர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகளில் தேர்வாகி சென்றிருக்கின்றார்கள். இதனை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் சிறுமி உள்பட 30 பேர் காயம்
கரூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகம் இணைந்து நடத்திய இந்த 67ஆவது மாநில சீசன் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் 39 புள்ளிகள் பெற்று சேலம் அணி முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சத்தையும், தங்கக் கோப்பையையும் தட்டிச் சென்றது.
கடலூர் அணி 16 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் பரிசாக ரூபாய் 50ஆயிரத்தையும், கோப்பையையும் வென்றது. 25 புள்ளிகள் பெற்று தூத்துக்குடி அணியும், 24 புள்ளிகளைப் பெற்று திருச்சி அணியும் மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயையும், கோப்பையும் வென்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பரிசுத் தொகையும், தங்க கோப்பையையும் வழங்கினார்.