தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சிலர், நேற்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக நடந்து சென்றுள்ளனர். ஊரடங்கின் போது சிலர் கூட்டமாக செல்வதைக் கண்ட கரூர் நகர காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், வட மாநிலத் தொழிலாளர்களை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, அவர்கள் கரூரிலிருந்து தங்களின் சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு நடந்தே செல்வதாகக் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தனியார் ஆம்னி பேருந்து ஏற்பாடு செய்து, வடமாநிலத் தொழிலாளர்கள் 27 பேரையும் பேருந்து மூலம் மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உரிய நேரத்தில் உதவி செய்த கரூர் நகர ஆய்வாளருக்கு, வட மாநிலத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அறிந்த கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார், ஆய்வாளரையும், காவல் துறையினரையும் வெகுவாகப் பாராட்டினார்.
இதையும் படிங்க:குழந்தை காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கரோனா!