கரூர்: மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திற்குள் நேற்று (மே 11) இரவு 10 மணிக்கு மேல் அரசு நகரப்பேருந்தில் ஏறிய திருநங்கைகள் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது, பயணிகளுக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், அடிதடியும் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கரூர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் பேருந்து நிலையத்திற்குள் உருட்டுக்கட்டைகளுடன் நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு அரசுப்பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளையும், பேருந்து நிலையத்திற்குள் இருந்த அலுவலகத்தின் கண்ணாடியினையும் உடைத்ததாகத் தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் காரணமாக பயணிகளும், பொதுமக்களும் அலறி அடித்துக் கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். இந்த கலவரத்தினை செல்போனில் படம் எடுத்த காவல் துறையினரும், பயணிகளும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும் தாக்கப்பட்டனர்.
இந்த கலவரம் காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வெளியில் சென்று நின்று கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக இன்று (மே 12) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
திருநங்கைகள் சுயமாக வாழ, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும், வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகள், வங்கிக்கடன், தொழில் மையம் மூலம் தொழில் தொடங்க நடவடிக்கைகள் வழங்கப்படுமென கூட்டத்தில் திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் இன்று (மே 12) பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் தகாத வார்த்தைகள் பேசுதல் போன்ற பிரிவுகளில் திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மளிகைக்கடையில் நின்றிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை