கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் திங்கட்கிழமை எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்களிடமிருந்து வரி மேல் வரி விதித்து வசூலிக்கும் வரிப்பணம் எப்படி அதானி குடும்பத்திற்கு செல்கிறது என்பதை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய 4வது தினம் நீதிமன்றத்தில் அவசர அவசரமாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் ஐந்து கேள்விகளை ராகுல் காந்தி முன் வைத்தார். ஒன்று, ஏன் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஒரே ஒரு நிறுவனமான அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்விதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்று ராகுல் காந்தி பேசினார்.
இரண்டாவது, பிரதமர் மோடி எந்த வெளிநாட்டுக்கு செல்கிறாரோ அங்கு அதானையும் செல்கிறார் வெளிநாடுகளில் மூலம் கொடுக்கப்படும் பணிகள் அதானி குழுமத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இலங்கையில் நாடாளுமன்ற நிலைக்குழுவில் மின்சார திட்டங்கள் அனைத்தும் அதானி குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
ராகுல் காந்தியின் மூன்றாவது கேள்வி, பங்குச் சந்தையில் அதானி குடும்பத்துக்கு சொந்தமான ஏழு நிறுவனங்கள் உள்ளிட்ட 20 போலி நிறுவனங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது யாருடைய பணம் பணத்துக்கு பினாமி அதானி என்றால் அந்த பணத்திற்கான முதலாளி யார் என கேட்டார்.
இந்திய மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு அதானி குழுமத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகளை வழங்க வேண்டும் எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது ஏன் அதானி குடும்பத்திற்கு மட்டும் சிறு குறு தொழில்கள் நலிந்து வருகின்றன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய இந்த கேள்விகள் ராகுல் காந்தியின் தனிப்பட்ட அரசியல் கேள்விகள் கிடையாது ஒட்டுமொத்த மக்களின் கேள்வியாகும்.
ராகுல் காந்தியின் நான்காவது கேள்வி, நாடு முழுவதும் விலைவாசி ஏற்றம், வேலை வாய்ப்பு இழப்பு ஆகியவற்றுக்கு முக்கிய காரணம் நரேந்திர மோடியின் நண்பர்கள், நாட்டை கொள்ளையடித்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் என்று கூறினார். குறிப்பாக நிரவ் மோடி, லலித் மோடி, நேகில் சார்சிலி உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் அரசு கட்டமைப்பை மீறி அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து தப்பித்து வெளிநாடு சென்றுள்ளனர். இது எப்படி சாத்தியமானது.
மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர்களை திருடர்கள் என்று தானே கூற முடியும். தேசத்தின் தியாகிகள் என்று கூற முடியுமா என ஜோதிமணி எம்பி கேள்வி எழுப்பினார். நாட்டுக்கு தப்பி சென்ற பிரதமர் மோடியின் நண்பர்கள் நான்கு பேரைத்தான் ராகுல் காந்தி திருடர்கள் என்று குறிப்பிட்டார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கூறவில்லை.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய ஏழு தினத்தில், ஒரு வழக்கு புதுப்பிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. ராகுல் காந்தி மீது மூன்று பேர் வழக்கு தொடுத்துள்ளனர். அதில் ஒருவர் பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி, மற்றொருவர் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் தான் வழக்கு தொடுத்தவர்கள்.
மேலும், அனைத்து வங்கிகளிலும் மக்களுடைய பணம் தான் உள்ளது. அந்த பணத்தை கடனாக பெற்று விட்டு செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல எப்படி முடிந்தது. இன்று ஏழை எளிய மக்களின் விவசாயிகளின் மொத்த பணமும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் அதானி குடும்பத்தில் இன்று அதிக அளவு முதலீடு செய்துள்ளது.
ஒரு எதிர்க்கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் நண்பர்கள் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்கள் என்று பிரதமர் மோடியின் ஊழலை தோலுரித்துக் காட்டி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செய்தி பரவத் துவங்கிய பின்னர், அவசர அவசரமாக வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமரேலி தொகுதியில் பாஜக எம் பி தலித் மருத்துவர் மீது மோசமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நடத்தையின் காரணமாக நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலம் தண்டிக்கப்படுகிறார். கீழ் கோட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேல்கோட்டுக்கு மேல் முறையீடு சென்றபோது, உயர்நீதிமன்றம் இது கொடிய குற்றம், இதற்கு தடையானை வழங்க முடியாது என மறுத்துவிட்டது. அதன் பின்னரும் பாஜக எம்.பி பதவி பறிக்கப்படவில்லை. அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விலக்கு பெற்று வந்தார்.
இதே சட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் ஏன் பொருந்தவில்லை. கொடிய குற்றம் செய்த பாஜக எம்பி பதவி பறிப்பில் ஆர்வம் காட்டாத அரசு, ஏன் ராகுல் காந்தி பதவியை பறிக்க இவ்வளவு அவசரம் காட்டியது. ஏனென்றால் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினால், ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடியின் ஊழல் தோலுரித்துக் காட்டப்படும் என பயப்படுகிறார். இதனால் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இதன் பின்னர் ராகுல் காந்தி குடியிருக்கும் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என அவசர அவசரமாக நோட்டிஸ் வழங்கினார்கள். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்னர் நாடாளுமன்றத்தில் எந்த பொறுப்பும் வகிக்காமல் இதுவரை அரசு இல்லத்தில் குடியிருந்து வருகிறார்.
ஒன்றிய அரசின் அடக்கு முறையை கண்டு தலைவர் ராகுல் காந்தி அச்சப்படவில்லை. ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலுக்கு எதிரான பேச்சிலிருந்து பின்வாங்க போவதில்லை. காங்கிரஸ் கட்சியும் பின்வாங்காது. விலைவாசி உயர்வு வேலைவாய்ப்பின்மை என மக்களை கடுமையாக பாதிக்கும் பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி பேசாமல் இருக்காது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதை மக்களிடத்தில் கொண்டு சென்று உரத்த குரலில் பேசுவோம்.
ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. கரூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் ஒரு லட்சம் வீடுகளில் எனது வீடு ராகுல் வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் அதற்கு பேராதரவு கிடைத்துள்ளது.
இந்த பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக முன்னெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரலை ஒடுக்கியதாக ஒன்று அரசு நினைக்கலாம் மக்கள் மன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதை ஒரு நாளும் முடக்க முடியாது ராகுல் காந்தியின் பின்னால் இந்திய மக்கள் பின்னால் இருக்கிறார்கள்.
ராகுல் காந்தியின் குரல் மக்களுக்கான குரல். மக்கள் ராகுல் காந்தியின் குரல் ஒடுக்கப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்கள். இதை தொடர்ந்து மக்களிடத்தில் எடுத்துச் செல்வோம் 2024இல் காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் தொடரும் கந்து வட்டி, மீட்டர் வட்டி கொடுமைகள் - மிரட்டும் வசூல் வேட்டை; 10 பேர் கைது!