கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக வந்து செல்கின்றனர்.
கரோனா தொற்று காலத்தால் புறநோயாளிகள் பிரிவுக்குச் செல்லும் நோயாளிகள் பார்வையாளர்களுக்கு கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ்விடத்தில் அவ்வப்போது குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால் நீர் தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழில் வெளியான செய்தி கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதன் விளைவாக சுகாதாரச் சீர்கேட்டை சரி செய்யும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன் கூறுகையில், 'மருத்துவமனைக்கு வருகை தரும் பொதுமக்கள் கை கழுவும் இடத்தில் உணவுப் பொட்டலங்கள், மீதமுள்ள உணவுகளை கொட்டி விடுவதால் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது.
பொதுமக்களும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் பதிவு செய்வதுடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும் ஈடிவி பாரத் தமிழ் செய்திகள் சமூக அக்கறையோடு செயல்பட்டு வருவது ஆரோக்கியமான ஊடகச் செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர் ராயனூர் முருகேசன் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமந்துசெல்லும் அவலம்!