கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ரெடிங்டன் பவுண்டேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்படுத்தும் உபகரணங்களை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் நேராக நிற்க உதவும் உபகரணம், தண்டுவடம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காற்று படுக்கை, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமர்வதற்கு ஏற்ற கார்னர் சீட், பார்வை பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையிலான கைபேசிகள் என 160 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 4.51 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, ரெடிங்டன் பவுண்டேசன் நிறுவனத்தின் தஞ்சை மண்டல அலுவலர் இந்திராகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.