கரூர்: விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் உயர்மின் கோபுர திட்டத்தைக் கைவிடக் கோரியும், ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், கருணைத் தொகை வழங்கக் கோரியும், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நேற்று (டிசம்பர் 16) காலை தொடங்கப்பட்டது.
இதனையடுத்து காலை 10 மணியளவில் கரூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி, காவல் துறையினர் விவசாயிகளைக் கைதுசெய்து திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.
பின்பு பலதரப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக வருவாய்த் துறை மூலமாகவும், காவல் துறை மூலமாகவும் உறுதியளிக்கப்பட்டது.
எனவே போராட்டமானது இன்று (டிசம்பர் 17) அதிகாலை 2 மணியளவில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை செந்தில்பாலாஜியை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சருடன் சந்திப்பு ஏற்பாடு செய்யாதபட்சத்தில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்படும் எனத் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ. 6 கோடி மதிப்பிலான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சொத்துகள் மீட்பு