கரூர் ஆட்சிமங்கலம் நியாயவிலை கடையில் பயோமெட்ரிக் முறையில் உணவு பொருள்கள் வழங்கும் முறையினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் பேசிய ஆட்சியர், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் 583 நியாயவிலை கடைகளிலும் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக சென்றடைவது உறுதிபடுத்தப்படும். மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களே நேரடியாக நியாயவிலை கடைகளில் தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை பெற்றுச் செல்லும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைரேகை வைக்க இயலாதவர்கள், நேரடியாக நியாயவிலை கடைக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு குடும்ப அட்டைதாரர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மூலம் பொருள்கள் வழங்குவதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.