கரூர்: மாவட்ட ஆட்சியர் நிறைவடையாத சாலைகளை அவசர கதியில் திறந்துவைத்த சம்பவம் பொதுமக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நகராட்சிக்கு உள்பட்ட கரூர் ரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 7 புறவழிச் சாலை வரை ரூ. 21.12 கோடியில் அம்மா சாலை அமைக்கும் திட்டத்திற்கு 2019 பிப்ரவரி 19ஆம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. இதனை அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தொடங்கிவைத்தார்.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப் பணிகளில் நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைக்கும் பணி எனப் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், நேற்று (பிப்.26) மாலை 5 மணியளவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அவசரகதியில் அம்மா சாலை திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் திறந்து வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர் விழி, “போக்குவரத்துத் துறை அமைச்சரின் கனவுத் திட்டமான ‘அம்மா சாலை திட்டம்’ நிறைவேற, நீதிமன்றத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் அனைத்தையும் சரி செய்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அம்மா சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது” எனப் பேசினார்.
ஆனால் தேசிய நெடுஞ்சாலை எண் 7 முதல் பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே முறை பாலம் வரை மட்டுமே பணிகள் நிறைவு பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்புதான் அவசரகதியில் சாலையோர நடைபாதை கல்பதிப்பு, வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றது. ஆனால் பெரிய குளத்துப்பாளையம் முதல் கரூர் ரயில்வே சந்திப்பு வரை பணிகள் முழுமை பெறாமல் மண் சாலைகளாக உள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி, ரயில்வே துறை நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், அம்மா சாலைப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, அங்கு திடீர் தடுப்பு வேலிகளை அமைத்தனர். அப்போது அங்கு உடனடியாக விரைந்து சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் மலர் விழி, கரூர் நகராட்சி ஆணையாளர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முறையான அனுமதி கிடைத்த பின்னர் பணிகள் நடைபெறும் என உறுதி அளித்திருந்தனர். இச்சம்பவம் நடைபெற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்பொழுது அம்மா சாலை திறப்பு விழா பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
மேலும், கரூர் ரயில்வே சந்திப்பு தேசிய நெடுஞ்சாலை எண் 7 புறவழிச்சாலை வரை 21 கோடியில் தொடங்கப்பட்ட பணிகளில், தற்போது 18 கோடி மதிப்பில் முதல் கட்டமாகப் பெரியார் நகர் முதல் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரை மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளதாக விளம்பரப் பதாகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் நடைமேடை உடன் கூடிய விளையாட்டு மைதானம் மற்றும் பூங்காவை, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, கரூர் நகராட்சி ஆணையர் சுதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், தமிழ்நாடு காகித ஆலை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆகியோர் முன்னிலையில் திறப்புவிழா நடைபெற்றது. இங்கும் பணிகள் நிறைவு பெறாமல் சுற்றுச் சுவர் மட்டுமே வண்ணம் பூசப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தோரணக்கல்பட்டியில் புதிதாக அமையவுள்ள கரூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், அவ்விடத்தில் புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை வைத்து திடீர் சிலை திறப்பு விழாவை மேற்கொண்டனர்.
தேர்தல் நடத்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் சிலமணி நேரத்திற்கு முன்பு அடுத்தடுத்து நடைபெற்ற திறப்பு விழா சம்பவங்கள் நேற்று மாலை கரூரில் பொதுமக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது . குறிப்பாகக் கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தின் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் உள்ளார். ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக அவசரகதியில் முழுமை பெறாத பணிகளைத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் சில மணி நேரத்துக்கு முன்பு திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.