கரூர்: கரூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்த சரவணக்குமார் டிசம்பர் 13ஆம் தேதி இரவு திடீரென மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாநகராட்சியில் துணை ஆணையாளராக பணியாற்றி வந்த K.M.சுதா கரூர் மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து இன்று டிசம்பர் 14ஆம் தேதி காலை கரூர் மாநகராட்சி ஆணையாளராக சுதா பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பயன்படுத்தும் நான்கு சக்கர அரசு வாகனத்தில் கரூர் மாநகராட்சிக்கு வருகை தந்த சுதா, கரூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட புதிய ஆணையாளருக்கு மாநகராட்சி ஊழியர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஈடிவி பாரத் ஊடக செய்தியாளரிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சுதா, “கரூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், மாநகராட்சி ஆணையாளரின் செயல்பாடுகள் இருக்கும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரிகளை பொதுமக்கள் உடனுக்குடன் செலுத்தி மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மேலும், கரூர் நகராட்சியாக இருந்தபோது இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாகவும், தற்போது கரூர் மாநகராட்சி என்பதால், கூடுதலாக மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே பணியாற்றிய கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வரி நிலுவை தொகையினை 6 கோடிக்கு மேல் வசூல் செய்து குறித்து கேட்டதற்கு, பதில் அளித்த புதிய ஆணையர் சுதா, தனக்கென ஒரு பாணி இருப்பதால் நான் யாருடைய பாணியையும் பின்பற்றுவதில்லை. வர்த்தகர்கள், தரைக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் சுமூகமானதாக தனது அணுகுமுறை இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!