கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை, லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டபடி, அதிமுக தொண்டர் திருமூர்த்தி என்பவர் எதிர்க்கட்சி வேட்பாளர் காசு கொடுத்து ஆரத்தி எடுக்க வைப்பதாக கூறி கோஷமிட, அதை மற்றொரு அதிமுக தொண்டரான பெரியசாமி என்னும் இளைஞர் செல்ஃபோனில் வீடியோ எடுக்க, அங்குவந்த அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் இருவரையும் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பெரியசாமி, திருமூர்த்தி ஆகிய இருவரும் திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்களை தாக்கியதாக கூறி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இதையடுத்து, பரப்புரையின்போது கலவரங்களைத் தூண்டிய நபர்கள் மீதும், அவர்களை ஊக்குவித்தவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகாவல்நிலையத்தில்ஜோதிமணி புகார் அளித்தார்.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் திட்டமிட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர்தான் இதுபோன்ற தனது கட்சியினரை தூண்டிவிட்டு நாங்கள் செல்லுமிடமெல்லாம் கத்தியை காட்டி மிரட்டி வருகிறார் என குற்றம்சாட்டினார்.