உலகளவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட பரவல் நிலை அடைந்துள்ளது. இதுவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் இந்த தொற்று நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து ஜமாத் தலைவர்களுடன் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்துரையாடியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜமாத் அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கோரியும் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசுகையில், "உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது. அப்படி கலந்துகொண்டவர்கள் பலரும் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி உள்ளனர் என்பது தொற்று கண்டறிதல் சோதனையில் உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், அம்மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து சென்று வந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தயவுசெய்து உங்கள் பகுதிகளில் எவருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் குறித்த அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வெளிநாடு வெளி மாநிலங்களுக்குச் சென்று கரூர் திரும்பி தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருந்தாலோ அவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டாட்சியருக்கும் தெரிவிக்க வேண்டும்.
சுகாதார நடவடிக்கை எடுக்கவோ அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள வீதிகளில் தனிமைப் படுத்துவதற்காக வரும் அரசுத் துறை அலுவலர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த ஒரு உயிருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு தயவு செய்து அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.