கரூரில் அமைந்துள்ள சதாசிவ பிரமேந்திரர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்று. இதன் கூடுதல் சிறப்பு காவேரி நதி மிக அருகாமையில் பாய்ந்து வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கர்நாடக மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா நேற்று (பிப்.15) சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இந்தப் பகுதியில் வாழும் மக்கள் புண்ணியம் செய்தவர்கள். இங்குள்ள காவல் துறை உயர் அலுவலர் ஜெயராமன், எப்போது வந்தாலும் நான் இங்கு தரிசனத்திற்கு வரவேண்டும் எனக் கூறுவார். அதன்படி நான் இன்று (பிப்.15) வந்தேன். இந்தப் பகுதியும் கர்நாடகமும், காவிரியால் நன்மையடைந்து வருகிறது. காவிரி கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு வருவதில் பெருமை கொள்கிறேன்.
தென்னிந்தியாவில் அதிக திருத்தலங்களை கொண்டது கர்நாடகமும், தமிழ்நாடும்தான். இந்த கோயிலில் வந்து வழிபட்டாலே நிம்மதி கிடைக்கும். நமக்கு வாழ வழியும் கிடைக்கும். இந்த கோயிலுக்கு வரும் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு இங்குள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என்று சோமண்ணா கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா