அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பரப்புரையின்போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓரு இந்து’ என்று பேசிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றிருந்த நிலையில், இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் முன்பு கமல் ஆஜராகி நிபந்தனையற்ற பிணையில் சென்றார். காவல்துறையினர் கமல்ஹாசனை பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் நீதிபதிகள் செல்லும் வழியாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலின் வழக்கறிஞர் விஜய், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுள்ளதாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களை அழைத்து பேசுவார் எனவும் அவர் தெரிவித்தார்.