கரூர்: படுகொலை செய்யப்பட்ட இளநீர் கடைகாரர் வீட்டிற்குச் சென்று ஜான் பாண்டியன் கட்சி நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாயை வழங்கினார்.
செப்டம்பர் மாதம், பட்டப்பகலில் இளநீர் கடைக்காரர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட இளநீர் கடைகாரரின் குடும்பத்தினரை சந்திக்க தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன், அவரது மனைவி ஆகியோர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், “கரூர் மாவட்டத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட நபர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது மனைவி, அம்மாவிடம் ஆறுதல் கூற வந்தோம். மேலும், கட்சியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை கிடைக்க முதலமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளேன்.
மேலும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தியாகி இமானுவேல் சேகரன் புகைப்படத்தை வைத்து சுவரொட்டி ஒட்டி அரசியல் செய்துவருகிறார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் செந்தில் பாலாஜி பாதுகாப்பில் இருந்துள்ளதாக தகவலும் வந்துள்ளது” என்று கூறினார்.