கரூர்: கோவை சாலையில் உள்ள பிரேம் மஹாலில் 69ஆவது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட விற்பனை கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர்.
பின்னர் கூட்டுறவு வார விழாவை ஒட்டி பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கூட்டுறவுத்துறை சார்பில் கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான கேடயங்களை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
பின் நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, ''கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்த விவசாயிகள் மட்டுமே சேர முடியும் என்ற நிலையை மாற்றுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, திமுக ஆட்சி அமைந்த உடன் கட்சிப்பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் உறுப்பினராக பதிவு மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசு என்பது அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தீர்மானம் நிறைவேற்றி விண்ணப்பத்தைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஒரு மாதத்தில் விண்ணப்பதாரர் முதன்மை கூட்டுறவு சங்க உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 9000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இவற்றில் வழங்கப்படாத கடன் தொகை ரூபாய் 2500 கோடி ஆகும். ஆட்சிப்பொறுப்பு ஏற்ற ஓராண்டு காலத்தில் ரூ.9000 கோடி கடன் வழங்கப்பட்டு, நடப்பு ஆண்டில் ரூ.2000 கோடி அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக நிலமற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கியில் கால்நடைப் பராமரிப்பு கடன் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டி இல்லாமல் கால்நடை ஒன்றுக்கு ரூ.15,000 வீதம் கடன் பெற முடியும். கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 84 கூட்டுறவு சங்கங்களில் ரூபாய் 75 லட்சம் வீதம் கால்நடைப் பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது”எனப் பேசினார்.
இதையும் படிங்க: கரூர் கழிவு நீர்த்தொட்டியில் மேலும் ஒருவரின் சடலம் மீட்பு!