அதிமுக கூட்டணியில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை தொகுதிகளில் அதிமுகவும் அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் பாரதிய ஜனதா கட்சியும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அலுவலருமான அண்ணாமலை போட்டியிடுகிறார். இதையடுத்து, அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று (மார்ச்.16) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை வேட்பாளருமான அண்ணாமலை,
”அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று, அடுத்த 6 மாதங்களுக்குள் பிரதமர் மோடியை இதே இடத்திற்கு அழைத்து வந்து அவர் வாயால் அரவக்குறிச்சி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்க வைப்பேன். அதிமுக கூட்டணி மூன்றில் இருபங்கு தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக - பாஜகவை பொறுத்தவரையில், இரட்டை எஞ்சின் பொருத்திய ரயிலில் முதலமைச்சர் பழனிசாமி ஒரு எஞ்சினாகவும், பிரதமர் மோடி மற்றொரு எஞ்சினாகவும் செயல்படுகிறார்கள்’என்றார்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ”ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றனர். அதன் பின்னர் அப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி பக்கமே செல்ல முடியவில்லை. அதே பாணியில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி 2000 ரூபாய் ஜெராக்ஸ் எடுத்து வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றார். தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை ஐபிஎஸ் களம் காண்பதால், செந்தில் பாலாஜி கரூர் தொகுதிக்கு ஓடிவிட்டர்” என்றார்.
இதையும் படிங்க:'எம்ஜிஆர் தொடங்கிய மூன்றாவது அணிதான் மற்றக் கட்சிகளை வனவாசம் அனுப்பியது' - கமல்ஹாசன்!