கரூர் மாவட்டம் பரமத்தி காட்டுமுன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்(29). இவரும் நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவிற்கும் ஓராண்டுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக வரதட்சணை கேட்டு ஜீவானந்தம், மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை அனிதாவின் தாய் தமிழரசிக்கு, அனிதா தூக்கு போட்டு இறந்து விட்டதாக ஜீவானந்தம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்களுடன் பதறியடித்து கொண்டு ஜீவானந்தம் வீட்டிற்கு வந்தபோது, அனிதாவின் உடலை குளிக்க வைத்து உடை மாற்றப்பட்டுள்ளதை கண்டு தாய் கதறி அழுதார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனிதாவின் உறவினர்கள், ஜீவானந்தனும், அவரின் தாய் லட்சுமி உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். பிரச்னை குறித்து விசாரிக்க கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஜீவானந்தம், அவர் தாய் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அப்போது அவர்களை அனிதாவின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து இருவரையும் காவல்துறையினர் மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பின் அனிதாவின் உறவினர்களை அழைத்து கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா விசாரணை மேற்கொண்டார். இதில், ஜீவானந்தம், அனிதாவின் பெற்றோரிடம் கார் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் பணம் கேட்டுள்ளார். அப்பணத்தை விரைவில் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்குள் அனிதாவை சித்ரவதை செய்து அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து ஜீவானந்தம் கைது செய்யப்பட்டு. மற்றவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர். இருப்பினும் அனிதாவின் மாமியார் லட்சுமி, ஜீவானந்தன் பாட்டியையும் கைது செய்யும் வரை மருத்துவமனையில் இருந்து அனிதாவின் உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று அனிதா குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.