கரூர்: தமிழ்நாட்டில் நேற்று (அக்டோபர் 10) ஐந்தாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் நகராட்சிக்குள்பட்ட செல்லாண்டிபாளையம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்கிய அமைச்சர், பொதுமக்களிடம் நலன் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இரண்டாம் இடத்தில் கரூர்
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட சிறப்பு முகாமில் ஆறு மணி நிலவரப்படி 19 லட்சத்து 98 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மகத்தான வெற்றியாகும். தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதில் 64 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 22 விழுக்காடு மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 53 ஆயிரத்து 600 பேர். இவர்களில் ஆறு லட்சத்து 22 ஆயிரத்து 921 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது 73 விழுக்காடு ஆகும்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவதில் முதல் இடத்தில் சென்னை உள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் கரூர் மாவட்டம் உள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தாலும் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
கர்ப்பிணிகளுக்கு அதிகளவில் தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் தமிழ்நாட்டில் 18 லட்சத்து 88 ஆயிரத்து 703 பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தடுப்பூசி கையிருப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 970 டோஸ்கள் உள்ளன.
18 வயதிற்குள்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி, பரிசோதனையில் உள்ளது. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால் அதிலும் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கும். ஏனென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கர்ப்பிணிகளுக்கு அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான் வாரந்தோறும் மருத்துவமனை மற்றும் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்துவருகிறார். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் இத்திட்டத்தில் 18 லட்சத்து 88 ஆயிரத்து 703 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
தடுப்பூசி மக்கள் செலுத்திக்கொள்ளவில்லை என்ற நிலை எங்கும் இல்லை. தடுப்பூசி முகாம்களை நோக்கி மக்கள் திருவிழாக் கூட்டம்போல் கூறுகின்றனர். முதல் தடுப்பூசி போட்டால் 70 விழுக்காடு தற்காத்துக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோபியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சந்தை கட்டுவதற்கான பூமி பூஜை