கரூர்: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரி மாணவர் நலன், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், போதிய மருத்துவர்களை பணியமர்த்துதல் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தூய்மை சுகாதாரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இது தொடர்பான ஆய்வு நேற்று (செப்.9) கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலரால் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் நோயாளிகள் பிரிவு, கண் அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொண்டார் .
இந்த ஆய்வின்போது, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர் தாமோதரன் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் உடனிருந்தனர். ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்தி மலர், “நேற்று (நேற்று முன் தினம்) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட துவங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்து பயிற்சி பெற்று, இந்த ஆண்டு நிறைவு செய்கின்றனர்.
அதன் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள வசதிகள் விரிவாக்கம், மேம்பாட்டு பணிகள், சுகாதாரம், தூய்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ படிப்பு கொண்டு வருவது குறித்து, தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (NMC) விண்ணப்பித்து அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசு, மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
ஒரு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நோயாளிகள் உயர் மருத்துவ சிகிச்சை பெரும் அளவிற்கு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் வசதி எப்பொழுது ஏற்படுத்தப்படும் என ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், “மருத்துவக் கல்லூரிகள் முதல் ஐந்து ஆண்டுகள் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு, பின்னர் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக தரம் உயர்த்துவதற்கான தரவுகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தயார் செய்து வருகிறது.
இதற்காக சிறிது காலம் அவகாசம் தேவைப்படுகிறது. மருத்துவமனையில் உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பொறுத்து, சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி வசதிகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொருத்தமட்டில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவர்கள் பயிற்சி பெற போதுமான பேராசிரியர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நோயாளிகள் வசதிக்காக புற்றுநோய் சிகிச்சை, கரூர் மருத்துவக் கல்லூரியில் பெறுவதற்கான மருத்துவப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாறுமாறாக அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!