பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தங்கம்! - மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி
கரூர்: மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மகிழ்விப்பதற்காக அப்பள்ளி ஆசிரியர்கள் தங்கம் வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும் நிலையில் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்ற ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது, அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம் வழங்குவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அப்பள்ளில் ஆறு மாணவர்கள் சேர்ந்தனர்.
தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் அந்த ஆறு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களை மகிழ்விப்பதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல், ஆசிரியர்கள், பொதுமக்கள் இணைந்து ஒரு கிராம் தங்க நாணயத்தை தலா ஆறு மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டனர். இதையடுத்து, அப்பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா இன்று(ஜூலை 30) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா கலந்துகொண்டு, மோனிஷா, இந்து, சுகந்தி, தியானேஷ்வரன் ராஜகுமாரன், பர்கத் நிஷா ஆகிய ஆறு மாணவர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கினர்.
இப்பள்ளியின் செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்