கரூர்: சமீபத்தில் நடந்து முடிந்த 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
இதேபோல மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்டப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். இவர்களுக்கு இந்தியா முழுவதும் தொடர்ந்து பாராட்டுகளும் பரிசு மழையும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் கரூரில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் பெட்ரோல் நிரப்பும் மையத்தின் உரிமையாளர் மலையப்பசாமி, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை கௌரவிக்கும் விதமாக, கரூர் நகர்ப் பகுதியை ஒட்டியுள்ள திருமாநிலையூர் பெட்ரோல் பங்க்கில், நீரஜ் என்ற பெயர் கொண்டவர்கள் தங்களது ஆதார் அட்டையைக் காண்பித்து, அடுத்த ஒரு வார காலத்திற்கு தினமும் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கியுள்ள இவர், தனது பெட்ரோல் நிரப்பும் மையத்தில் விளம்பரப் பலகை ஒன்றை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளார்.
இதுவரை நீரஜ் என்ற பெயரில் யாரும் பெட்ரோல் நிரப்ப வரவில்லை என்றாலும், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரரின் பெயருக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக அறிவித்துள்ள அறிவிப்பு பொதுமக்களைக் கவர்ந்துள்ளது.