கரூர் அருகே உள்ள ஆண்டாங்கோயில் மேற்கு கிராமம் கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிவேலின்.
இவருக்கு 16 வயதுடைய மைனர் மகள் உள்ளார். புலியூர் அருகே உள்ள மேலப்பாளையம் கிராமம் வடக்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தோஷ்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி மைனர் பெண்ணுக்கும், சந்தோஷுக்கும் கரூரில் உள்ள வெண்ணைமலை முருகன் கோயில் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர், அன்று இரவே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்த சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று (ஜூன் 10) விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. உடனே, கரூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், மணமகன் சந்தோஷ்(22), மைனர் பெண்ணின் தந்தை மணிவேல்(45), தாய் ராஜேஸ்வரி(40), சந்தோஷின் தாய் அமுதவள்ளி ஆகிய நான்கு பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர். பின்னர், மைனர் பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.