நீலகிரி: கோடையில் குறிப்பாக வெயிலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் சென்னையில் தற்போது இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குளிர்காலத்தை ஒட்டி பனி பொழிந்து வருகிறது. கோடை வெயிலை சந்திக்கவுள்ள சென்னை மக்கள் சற்று பனியின் குளுமையை அனுபவித்து வருகின்றனர். சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் பனி பொழிவு இருந்து வரும் நிலையில், மலை மாவட்டமான நீலகிரி பனியின் தாக்கத்தால் குட்டி காஷ்மீரை போல மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் நீர் பனி மற்றும் உறைபனியின் தாக்கம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா். நீர் நிலைகள், புல்வெளிகளில் பனி படா்ந்துள்ளதால் பூக்கள் காய்ந்து போகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலவும் பனியை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கடும் பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பகல் நேரத்திலேயே சாலை ஓரங்களில் தீ மூட்டி குளிர் காயும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உதகையில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் கடும் உறைபனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மாலை நேரத்தில் உதகையில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனையடுத்து இன்று அதிகாலை உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் நீர் பனி மற்றும் உறைபனி பொழிவு ஏற்பட்டது.
காலை வேளையில் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். காலை 10 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும் குளிரின் நிலை மாறாமல் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.