சென்னை: எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில், கரூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் கடந்த 22ஆம் தேதி அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 விழுக்காடு வரை சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும் கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாய் பணம், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இதையடுத்து, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் இன்று (செப். 30) விசாரணைக்கு முன்னிலையாகுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைப் பணிகளைக் காரணம் காட்டி விஜயபாஸ்கர் கால அவகாசம் கேட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பலமுறை விஜயபாஸ்கர் விசாரணைக்கு முன்னிலையாகாமல் கால அவகாசம் கேட்டுவந்த நிலையில் மீண்டும் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு விஜயபாஸ்கரை நேரில் விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசித்துவருவதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க : தாய்- சேய் மருத்துவமனையை திறந்துவைத்த முதலமைச்சர்