கரூர்: கிருஷ்ணராயபுரம் கே.பிச்சம்பட்டி அருகே பிரபல ரவுடி பிரபு (38) இன்று (ஜூலை 5) காலை 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்துத் தகவலறிந்த மாயனூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று பிரபுவின் உடலைக் கைப்பற்றி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே திருச்சி சரக காவல் துணை ஆய்வாளர் (DIG) ராதிகாவும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சுந்தர வடிவேலும் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணை
அப்போது நேற்று (ஜூலை 4) மாலை கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை மறித்து பிரபு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் லாரி ஓட்டுநர், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவன மேலாளர் லோகநாதன் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை சமாதானம் பேசுவதாக, பிரபுவை அழைத்த லாரி ஓட்டுநர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை சரமாரியாக தாக்கி வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு தரப்பினரிடையே மோதல் காரணமாக கொலை நடைபெற்று இருப்பதால், அப்பகுதியில் மேலும் தகராறு ஏற்படாமல் இருக்க, சுமார் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்!