கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச் 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மலர்விழி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பின்னர் கரூர் உழவர் சந்தை அருகிலுள்ள புதிய நகராட்சி திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும் திறந்து கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை தொடங்கி பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், "தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்டத்தில் கரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு 355 வாக்குச்சாவடி மையங்களும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் 310 வாக்குச்சாவடி மையங்களும் கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவை தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் 312 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 1274 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் இன்று கணினி முறையில் குழுக்கள் செய்யப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களும் 29 சதவீத வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் அவை பயன்படுத்தப்படும்" என்றார்.
தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 426 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 426 கட்டுப்பாட்டு கருவி இயந்திரங்களும் 458 வாக்கு தணிக்கை இயந்திரங்களும் என 1310 இயந்திரங்கள் பிரித்தெடுத்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு 1144 இயந்திரங்களும், கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1098 இயந்திரங்களும் குளித்தலை சட்டப்பேரவை தொகுதிக்கு 1153 இயந்திரங்களும் என மொத்தம் 4705 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சீட்டு ஒப்புகை இயந்திரங்கள் (VVPAT) அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.