கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 14) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , “தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு இறையாண்மையை மீறி புதிய ஒன்பது ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கனிம வளங்களை சுரண்ட மீண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது. வேளாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அப்படியிருக்கையில் தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையில் தமிழ்நாட்டை பாஜக அரசு வைத்துள்ளதை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஏற்கனவே கர்நாடக பாஜக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 9ஆயிரம் கோடி அளவில் அணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு செய்து அதில் ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கியுள்ளது. இதனை ஒன்றிய அரசு கண்டிக்காமல் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கர்நாடகா பாஜக அரசுக்கு துணை போகிறது.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு மறைமுகமாக தமிழ்நாட்டிலுள்ள டெல்டா மாவட்டங்களில் மீண்டும் செயல்பட அனுமதியளிப்பதற்கான சதித்திட்டம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய பாஜக அமைச்சர்களுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய பாரா ஒலிம்பிக் போட்டிக்கு மாற்றுத்திறனாளி தேர்வு - அரசு உதவி செய்ய கோரிக்கை