கரூரில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், அரசு மணல் குவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசுகையில், “கரூர் மாவட்டத்தில் புகலூர், கார் உடையாம்பாளையம் கிராமத்தில் செயல்படும் பொன் விநாயகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரிக்கு, கடந்த மே 7ஆம் தேதி சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் சட்ட விதியை பின்பற்றாமல், காவிரியாற்றில் மண்மங்கலம் அருகே நன்னியூர், மல்லாம்பாளையம், கிருஷ்ணராயபுரம் அருகே கள்ளபள்ளி, குளித்தலை அருகே கே.கோட்டை ஆகிய 4 இடங்களில் அரசு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அமைக்கப்படவுள்ள புதிய மணல் குவாரி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரி 500 மீட்டர் தொலைவு தூரத்திலேயே இருந்தால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 05.00 ஹெக்டர் பரப்பளவு இருந்தால் கட்டாய கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2018ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
முழுவதும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு எதிராக சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றும், மக்களைத் திரட்டியும் போராடுவோம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அரசு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது” என்றார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை மயூர நாட்டியாஞ்சலி விழா... கண்கவரும் நாட்டியம்...