கரூர்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகிலன், நேற்று (ஜூன் 14) கரூர் குப்பம் அருகே நடைபெற்ற நான்கு கல்குவாரிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முகிலன், “கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்கி வருகிறது.
இது குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்டதற்கு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் கண்டன அறிக்கை தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் சட்ட விராத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, வெள்ளியணை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.
அப்போது, அவரது குடும்பத்திற்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை. நேற்றைய முன்தினம் (ஜூன் 12) தென்னிலை மீனாட்சிவலசில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயி கலையரசி, சட்ட விரோதமாக குண்டு கட்டாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, சட்ட விரோதமாக குண்டு கட்டாக பெண் விவசாயியை தூக்கிச் சென்ற காவலர்கள், பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டில் வந்து விட்டுச் சென்றனர். சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்கிறார்.
இவரது ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் காவல் துறை எவ்வாறு சட்ட விரோதமாக செயல்படுகிறது என்பதற்கு உதாரணங்களைத் தெரிவித்தேன். கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமான கல்குவாரிகள் இயங்குவதாக ஆதாரங்கள் உடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சட்ட விரோதமான கல்குவாரிகள் மூடப்பட வேண்டும். கிராமப்புற சாலைகளில் கனரக வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடை உள்ளது மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி அதிக அளவு திறன் கொண்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதே விதிமுறை தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும். ஆனால், அவ்வாறு கடைபிடிக்கப்படுவதில்லை.
இது குறித்து தேனி, திருப்பூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து, பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில் எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மணல் தேவைக்கு வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனால், அரசோ காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி அளித்து, மணல் குவாரிகள் மூலம் மணல் அள்ளி வருகிறது. கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கணேஷ் முருகன் கல்குவாரி வெடி வைத்ததால், குடியிருப்பு பகுதிக்குள் ராட்சத கற்கள் விழுந்தது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூலம் 80 மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. அரசு விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் இல்லை. இந்த ஆட்சியாளர்களின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் மக்கள் தகுந்த பாடத்தை ஆட்சியாளர்களுக்கு புகட்டுவார்கள்.
கரூர் பரமத்தியில் புதிதாக அமைய உள்ள நான்கு கல்குவாரிகளால் எந்த பயனும் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்புதான் உள்ளது என்று கருத்துகேட்புக் கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். எனவே, இதற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட பெண் விவசாயி.. வெளியான சிசிடிவி காட்சிகள்!