கரூர்: கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை அருகே 2 இடங்களில் அரசு மணல் குவாரி செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மன்மங்கலம் தாலுகா வாங்கல் அருகே உள்ள மல்லம்பாளையம் பகுதியில் ஒரு மணல் குவாரியும், என்.புதூர் பகுதியில் மற்றொரு அரசு மணல் குவாரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது 2 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இந்த அரசு மணல் குவாரிகளில், விதிமுறை மீறல்கள் நடைபெறுவதாக சில புகார்கள் எழுந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் வீடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரி ஆகிய பகுதிகளில் கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சோதனை செய்து, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், இன்று (அக்.10) மீண்டும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் செயல்படும் என்.புதூர், மல்லம்பாளையம் ஆகிய 2 இடங்களில் காலை 10 மணி முதல் 4க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 15 அதிகாரிகள், துணை ராணுவப்படை போலீசார் பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் அரசு அனுமதித்த விதிமுறையை மீறி, அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்பட்டுள்ளதா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஐஐடி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழு உதவியுடன் அளவிடும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக சட்டமன்ற கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் 2 இடங்களில் சோதனையை துவக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்.. நாளை விசாரணை!