கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள ஆண்டிபட்டிகோட்டை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வேனை சோதனையிட்டதில், ரூ.5.63 கோடி மதிப்பிலான 94 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவ்வாகனத்தையும், தங்க நகைகளையும் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நடத்திய விசாரணையில், மதுரையிலிருந்து சேலத்திற்கு தனியார் நிறுவனம் மூலம் தங்க நகைகள் கொண்டுவரப்பட்டதாக கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் சார்பில் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு அதிகம் என்பதால், மறுசோதனைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு ஆவணங்களை ஆட்சியர் ஆய்வு செய்தபின் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.