மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சியின்போது, 12.08.14 அன்று சட்டப்பேரவையில் விதிகள் 110-இன் கீழ் கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக 19.01.15 அன்று கல்லூரி கட்டுமானப் பணிக்காக ரூ. 229 கோடி நிதி ஒதுக்கி அதற்கான அரசு ஆணையை வழங்கினார்.
கரூரில் மருத்துவக் கல்லூரி இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக நான்கு ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை வைத்ததின் பேரில், கரூர் சணப்பிரட்டியில் இடம் தேர்வு செய்து, 17.45 ஏக்கரில் கடந்த ஆண்டு கரூர் மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணி தொடங்கியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிக்கு கூடுதலாக ரூ. 40 கோடி வழங்கினார். மொத்தமாக ரூ. 269 கோடியில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணி முடிக்கப்பட்டுள்ளது. இது 800 உள்நோயாளிகள் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாகவும், மாணவ மாணவிகள் பயிலக் கூடிய வகையில் மருத்துவக் கல்லூரியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 31.07.19 அன்று காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்தார். இன்று கரூர் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இணைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் கல்வெட்டு, மாணவர்கள் விடுதி கட்டடங்களை திறந்து வைத்து, நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அவர்களை மேளதாளம் முழங்க வழி எங்கும் வரவேற்று, மருத்துவமனை வளாகத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.