கரூர்: பள்ளப்பட்டி தெற்கு மந்தை தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பள்ளப்பட்டி நகர் மன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மற்றும் கட்சியின் கொடி ஏற்ற விழா நிகழ்ச்சி நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி, நகரமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி நகர்மன்ற உறுப்பினர் ஷாகுல் அமீது உள்ளிட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜவாஹிருல்லா, "கரூர் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு போதிய அரசு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். பள்ளப்பட்டி பழைய பாலத்தைப் புதுப்பிக்க நெடுச்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கான நிதி திட்டங்கள் 34 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கடந்த நிதி ஆண்டில் 365 கோடி தரப்பட்டது.
ஆனால், நடப்பு ஆண்டில் 44 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை விதியை குறைப்பது, பாஜக அரசின் சிறுபான்மை விரோதப் போக்கைக் காட்டுகிறது. இதுதவிர, ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் நிதியையும் ஒன்றிய பாஜக அரசு குறைத்துள்ளது.
பாஜகவில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்காமல் பாஜக அரசுக்கு எதிராக துணிந்து செயல்படும், கடந்த 20 மாதங்களாகத் தமிழ்நாட்டின் நலனைக் காத்து ஆட்சி செய்து வரும் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஈரோடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குப் பேனா நினைவுச்சின்னம் வைப்பது தேவையான ஒன்று. தமிழ் மொழிக்காக ஆற்றிய தொண்டு காரணமாக முத்தமிழ் அறிஞர் என அழைக்கப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு அரசு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். ஆனால், அதே நேரம் சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துக்களைக் கேட்டு, சுற்றுச்சூழலுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் சார்பில் ராகுல் காந்தி நடத்திய யாத்திரை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 வருடங்களைக் கடந்து ராகுல் காந்தி சென்ற யாத்திரை இந்திய அரசியல் வரலாற்றில் புதுமையான ஒன்று இதுவரை எந்த அரசியல் தலைவர்கள் இப்படி ஒரு யாத்திரை நடத்தியதில்லை. அதே நேரம் இந்த யாத்திரை அரசியலுக்கானது அல்ல. இது ஒற்றுமைக்கான யாத்திரை. ராகுல் காந்தி நடத்திய யாத்திரை மதச்சார்பற்ற அனைத்து தரப்பு நபர்களுக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. எதிர்க்கட்சியினர் அனைவரும் ஓர் அணியில் இணைந்தால் நிச்சயமாக பாஜகவை வீழ்த்த முடியும்" என்றார்.
இதையும் படிங்க: நடிகை ஹன்சிகா கல்யாணம்.. 'லவ் ஷாதி டிராமா' டிரெய்லர் வெளியீடு!