கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அரசு ஆதி திராவிடர் நலத்துறை மேல்நிலை பள்ளியில் வேளாளர் மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட வளர்ச்சி முகாம் நடைபெற்றது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடங்கிய, இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் மாணவர்கள் புன்னம் பகுதியில் இருக்கக்கூடிய கோயில்கள், அரசுப் பள்ளி, பொது இடங்கள் போன்றவற்றில் தூய்மை பணி மேற்கொண்டனர்.
மேலும், நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் தினமும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
பின் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜெகநாதன் மாணவிகளிடம் கூறுகையில், 'வாழ்நாளில் காவல் நிலையம், நீதிமன்றம், வழக்கறிஞரிடம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பணம், நேரம் மிச்சமாகும். மேலும் விட்டுக்கொடுத்து சுமுகமாக பல பிரச்னைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்’ என்றார். மேலும் சட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகள் குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பற்றிய சட்டங்கள் விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை!