கரூர் சட்டப்பேரவை திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசிச் சென்றார். அதன்பின்னர் கரூர் வருகைதந்த திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் எனப் பேசியிருந்தார்.
கடந்தமுறை 2006, 2011ஆம் ஆண்டு கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிட்டபோது, முத்தாலம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்திவிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
திமுக, அதிமுக சார்பில் தற்போது சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. மறைமுகமாக அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இது ஒருபுறமிருக்க நேற்று (பிப். 22) கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்தி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து துண்டறிக்கைகளை வழங்கினார்.
செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு முகாம், கரூர் மக்களைத் தொடர்புகொள்ள புதிய இணையதளம் தொடக்கம், திமுகவின் முக்கியத் தலைவர்களை அழைத்துவந்து கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்வது என பரபரப்பான செயல்பாடுகளால் திமுக கட்சித் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
இதையும் படிங்க:அரசியல் கட்சி தலைவர்களுக்கு சமூக வலைதளம் இன்னொரு களம்